Saturday, 15 June 2013

இரவுத் துணைவன்



















உறக்கமற்று
புரண்டுபடுக்கும்
பல
அமைதியான இரவுகளில்
திடீரென தோன்றுகிறாய்
என் துணையாக!
உன் உடனிருப்பை
உணரும்
அந்நொடிகள்
மிக மிக
இனிமையானவை !

மிக மிக வேகமாய்
ஓடும் நாட்கள்
இத்தனை
நீண்ட நொடிகளை
உடையதா ?
ஆச்சரியம்தான்
உன் பேச்சுமொழி!

நீண்டு கொண்டே
செல்லும்
உன் பேச்சுமொழி
தாலாட்டாய்
மாறும் நொடி
இதுவரை
இரகசியம்தான்!

இரவுகளின்
இரகசியங்களை
பேசிக்கொண்டே திருடும்
உன் வாக்கியத்தின்
அர்த்தம் அறிய
நானும்
அறிய வேண்டும்
உன் இயந்திர மொழி!

என்
பல இரவுகளின்
துணையான
உன் இடத்தில்
பகலில் தெரிகிறது
ஒரு கடிகாராம் மட்டுமே!!

Thursday, 4 April 2013

நட்பின் முகங்கள்

எங்கோ,
என்றோ ,
கேட்டப்
பாடலின் வரிகளைப்போல்
நம்மை அறியாமல்
அவ்வப்போது
நினைவில் வந்துவிடுகின்றன
பிரிந்து
பல நாட்களான
நட்பின் முகங்கள்..

Saturday, 17 November 2012

என் குழந்தை



எதிர்காலத்திற்காக
நிகழ்காலத்தைத் தொலைத்தவர்களென
என் பெற்றோரை
எண்ணும் வேளையில்,
என் மடியில்
அர்த்தத்துடன் சிரித்தபடி
என் குழந்தை .....

Thursday, 15 November 2012

ஊஞ்சல்






ஆட்டிவிட 
ஆளில்லாத 
பூங்காவின் ஊஞ்சல் பொழுதுகள் 
தெளிவாய் உணர்த்தும் 
தனிமையின் வலியை ....

Wednesday, 7 November 2012

முதுமை

 
நரைக்கத் தொடங்கும்
என் தாய் தந்தையின் முடிகளும்
என் எதிர்காலத்திற்கான
அவர்களின் கவலைகளும்
எனக்கு உணர்த்துகிறது,
காலங்கள் ஓடுவதை......
முதுமையை உணரத் தொடங்குவது,
அவர்கள் மட்டுமல்ல நானும் தான்...........



Sunday, 23 September 2012

பிரிவின் வலி


(வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு சகோதரிகளின் சார்பில் ஒரு கடிதம்)







பிரிவுகள் 
உறவை வலுப்படுத்தும் 
உண்மைதான் 
வார்த்தையளவில் ...

உணர்ச்சியுடன் 
சிந்தித்தால்தான் 
உள்ளத்தின் 
வலி புரியும்....

சண்டையிட்டு 
வாங்கிய அடிகளின் 
வலியைவிட 
வேதனையானது 
சண்டையிட ஆளில்லாத 
தனிமையின் வலி.....

தொலைபேசி பேச்சுக்களினால் 
வார்த்தைகளைப் 
பரிமாறிக் கொள்ளலாம்...
கழிந்த ஆண்டுகளின் வாழ்கையை????

உனக்காக 
நிகழ்வுகளைச் சேமிக்க 
முடியாவிட்டாலும்
நிகழ்ச்சியின் அனுபவங்களை 
சேமித்து வைத்துள்ளோம் 
நீ வரும் நாளை 
எதிர்பார்த்து !!!

Thursday, 20 September 2012

தீர்மானம்


இன்று
எதுவும்  செய்யவில்லை
நாளை செய்வதை
தீர்மானித்ததை தவிர...!
நிம்மதியோடு
உறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு இரவும்....!