Saturday 17 November 2012

என் குழந்தை



எதிர்காலத்திற்காக
நிகழ்காலத்தைத் தொலைத்தவர்களென
என் பெற்றோரை
எண்ணும் வேளையில்,
என் மடியில்
அர்த்தத்துடன் சிரித்தபடி
என் குழந்தை .....

Thursday 15 November 2012

ஊஞ்சல்






ஆட்டிவிட 
ஆளில்லாத 
பூங்காவின் ஊஞ்சல் பொழுதுகள் 
தெளிவாய் உணர்த்தும் 
தனிமையின் வலியை ....

Wednesday 7 November 2012

முதுமை

 
நரைக்கத் தொடங்கும்
என் தாய் தந்தையின் முடிகளும்
என் எதிர்காலத்திற்கான
அவர்களின் கவலைகளும்
எனக்கு உணர்த்துகிறது,
காலங்கள் ஓடுவதை......
முதுமையை உணரத் தொடங்குவது,
அவர்கள் மட்டுமல்ல நானும் தான்...........



Sunday 23 September 2012

பிரிவின் வலி


(வெளிநாடுகளில் வாழும் சகோதரர்களுக்கு சகோதரிகளின் சார்பில் ஒரு கடிதம்)







பிரிவுகள் 
உறவை வலுப்படுத்தும் 
உண்மைதான் 
வார்த்தையளவில் ...

உணர்ச்சியுடன் 
சிந்தித்தால்தான் 
உள்ளத்தின் 
வலி புரியும்....

சண்டையிட்டு 
வாங்கிய அடிகளின் 
வலியைவிட 
வேதனையானது 
சண்டையிட ஆளில்லாத 
தனிமையின் வலி.....

தொலைபேசி பேச்சுக்களினால் 
வார்த்தைகளைப் 
பரிமாறிக் கொள்ளலாம்...
கழிந்த ஆண்டுகளின் வாழ்கையை????

உனக்காக 
நிகழ்வுகளைச் சேமிக்க 
முடியாவிட்டாலும்
நிகழ்ச்சியின் அனுபவங்களை 
சேமித்து வைத்துள்ளோம் 
நீ வரும் நாளை 
எதிர்பார்த்து !!!

Thursday 20 September 2012

தீர்மானம்


இன்று
எதுவும்  செய்யவில்லை
நாளை செய்வதை
தீர்மானித்ததை தவிர...!
நிம்மதியோடு
உறங்கிப்போகிறேன்
ஒவ்வொரு இரவும்....!


Wednesday 19 September 2012

முற்றத்து மாமரம்

தேதி தெரியாத
என்றோ தின்ற
மாம்பழத்தை
இன்றும்
நினைவுப்படுத்துகிறது
என் வீட்டு
முற்றத்து மாமரம் .....

Sunday 16 September 2012

தோல்விப்பயணம்

பாதைகள் மறந்து 
பயணங்கள் 
மட்டுமே மிஞ்சுகிறது 
என் பயணங்களில் ......

வெற்றி நோக்கிய
வழி இதுவென 
எடுத்துவைக்கும் அடிகளுக்கு 
மட்டும்தான் தெரியும் 
அது தோல்வியாய்ப்போன 
நொடிகளின் வலி....

எட்டிப்பிடிக்கும் தொலைவில்
வெற்றிக்கனி..!
எட்டிப்பிடிக்கும் முன்
தொலைந்து விடுகிறது 
எட்டாக்கனியாகவே ....

உலகே 
தோல்விமயமென 
பிதற்றிக்கொண்டேத்  தேடுகிறேன்
தோல்வியில்லா உலகை... 

ஒரு திசைக்கு
மறு திசை 
காத்திருக்கிறது
இன்னுமொரு தோல்வி ...

அனுபவித்து
அனுபவித்து 
அலுத்துப்போன 
தோல்வியில்தான் தெரிகிறது 
வெற்றிபெறும் நம்பிக்கை
என்னிலும் 
உண்டென்று......

Saturday 15 September 2012

தரிசனம்

தரிசனத்திற்காய்
காத்திருக்கும்
நீண்ட வரிசைகளில்
பலருள் வந்து மறைகிறது
கடவுளை பற்றிய
விடைதெரியா  கேள்விகள் .......